Saturday 26 August 2017

Anna University - Entrance System for Engineering

பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு?

​​​>>மருத்துவப் படிப்புக்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்துவதைப் போலவே பொறியியல் படிப்புக்கும் அத்தகைய ஒரு தேர்வு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

>>நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அமைப்பு கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதிலுமுள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2018-ல் இருந்து தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

>>தற்போது நாடு முழுவதிலும் 3,300 அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகவும் ஆண்டொன்றிற்கு இந்தக் கல்லூரிகளில் 16 லட்சம் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

>>இந்தக் கல்லூரிகளில் மாநிலத்திற்கு ஒரு விதமாக சேர்க்கை நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.தமிழகத்தில் பிளஸ் டூ மார்க் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.மருத்துவக் கல்லூரிகளிலும் அப்படித்தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்த முறை நீட் தேர்வால் மாற்றப்பட்டுள்ளது.அடுத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் சேர்த்து ஒரே மாதிரியான தேர்வு ஒன்றை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்து,வருகின்ற கல்வி ஆண்டில் இருந்தே அது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது.

>>இந்த நிலையில் அடுத்த ஆண்டே அதை அமல்படுத்தலாமா வேண்டாமா என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் இன்னும் முடிவெடுக்கவில்லை.நீட் தேர்வின் விளைவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துவது பற்றிப் பரிசீலிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

>>எனவே அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடக்காது என்றாலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாகக் கைவிடவில்லை எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment