பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் 50% இடங்கள் காலியாகவே உள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 1 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டாலும் தற்போது செயல்பட்டு வரும் 527 கல்லூரிகளில் 1.89 லட்சம் இடங்களுக்கு, 1,41,077 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களில் கடந்த ஜூலை-23 ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வுக்கு 1,08,690 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 70,741 பேர் மட்டுமே தங்களுக்கான இடங்களைத் தேர்வுசெய்துள்ளனர். முக்கியமாக, 37,468 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இதனால், 1,04, 715 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் 50% பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 11-ம் தேதியுடன் முடிகிறது. துணைக் கலந்தாய்வுக்காக ஆகஸ்ட் 16 அன்று விண்ணப்பிக்கலாம். துணைக் கலந்தாய்வு நாள் (ஏற்கனவே வராமல் போனவர்களுக்கு) ஆகஸ்ட் 17ஆம் தேதியும், ஆதிதிராவிட இனத்தவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியும் நடத்தப்படும். ஆகஸ்ட் 18ஆம் தேதியோடு கலந்தாய்வு முடிவதால் செப்டம்பர் 1ஆம் தேதியன்று கல்லூரிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment